MySpace glitters: CoolSpaceTricks.com

Wednesday, June 29, 2011

எனக்கும் என்னவளுக்குமாய் ஒரு கவிதை நண்பனிடம்(Parthipan) இருந்து.......

June 29, 2011 by Pirass

அவன் இனியன்.
கணிப்பொறிகளோடு
கண்விழித்து யுத்தம் செய்பவன்.
இரவு பகல் பாராது 
மென்பொருளோடு முத்தம் செய்பவன்.


அவள்
சுடர்விழி
பெயரில் மட்டுமல்ல
விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.


மலையில் பறந்து திரியும் ஒரு
நந்தவனம்
சிரிப்பில்
பேச்சில்
சிணுங்கலில்
கவிதைகளுக்கு விளக்கம் சொல்பவள் !


கண்டதும் காதல் என்பதில்
அவனுக்கு உடன்பாடில்லை
விழிகள் காண்பவை உடலை மட்டுமே
கண்டவுடன் மோகம் முளைவிடலாம்
காதல் கிளைவிடாது என்று தர்க்கம் செய்பவன்.


கண்டான்.
அவளை கண்டவுடன்
காதல் பிறந்துவிடவில்லை..
அல்லது

கண்டவுடன் பிறந்ததை
காதல் என்று அவன் கற்பித்துக் கொள்ளவில்லை

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
அவளைக் கண்டவுடன்
அவனுக்குக் கைகூடியது.

மனம் ஏனோ சிறகொடிந்த சிட்டுக்குருவியாய்
அவள் நினைவுகளில்
விழுந்து கிடந்தது.


அவளோடு நட்புச் சுவர்கட்ட
அதுவே அவனுக்கு 
சீனப் பெருச்சுவராய்
இருக்கும் என்று
அவன் நினைக்கவில்லை 

பேசினான்.
பேசினாள்.

காதலுக்கும் இசைக்கும் மட்டும்
மொழி ஒரு முட்டுக் கட்டையல்ல.
ரசிக்கும் மனசு போதும்.


அவளுடைய வார்த்தைகளில்
இவன் மனசுக் கூட்டுக்குள்
பச்சைக் கிளிகள்
சிகப்பு அலகுகளால்
அழகியல் பயின்றன !!!


நாட்களின் இடைவேளை
அதிகமாகி
மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு
குளிர் மாலைப் பொழுதில்

தொலை பேசி அலையில் அவன் மனம் திறந்தான்.

உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர்.
விளக்க முடியவில்லை
ஆனால்


தவறான பேருந்தில்
தவறாமல் ஏறுகிறேன்.


புத்தகத்தைத் திறந்து வைத்து
உன்னைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

குளியலறையில் சோப்பு தேவையென்பதை
குறித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது
குறித்துவைத்துப் பார்த்தேன் ஆனால்
குளிக்கவே மறந்துவிட்டேன்.


விளங்கியது போல இருக்கிறது
ஆனால் விளக்க முடியவில்லை.


நான்
காதல் என்னும் வட்டத்துக்குள்
உன்னைச் சுற்றத்துவங்கிவிட்டேன்
சுடர் .


மனசு தந்தியடிக்க.
வார்த்தைகள்
காந்தத்தின் எதிர்துருவங்களை
வலுக்கட்டாயமாய் இணைக்கும் போது
விலகுவது போல விலக.

சிதறல்களின் கோர்வையாய் சொல்லி
வியர்வையாய் ஒரு முனை நின்றான்
.........................................................




தொடர்கிறது.........
ஏதேதோ எதிர்பார்த்தான் 
என்ன பழக்கம் என்றாள் ..


சிரித்தாள்
அப்புறம்,
சொல்லுங்க அவ்வளவுதானா ?


உனக்கும் எனக்கும்
வார்த்தைப் பழக்கம் துவங்கி
ஒரு வருடம்  தான் முடிந்திருக்கிறது
காதல் வந்துவிட்டதென்று கற்பனையா ?


நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்
என் மனசு நிம்மதிகொள்கிறது.
குழம்பாமல்
மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.
அது
கடலைச் சேரும் வரை காத்திருங்கள்


நதியைத் தேடி
கடல்
கரைதாண்டி வந்ததாய் சரித்திரமில்லை !!!


உங்களை எனக்குப் பிடிக்கும்.
அது காதலின் முன்னுரையல்ல
நட்பின்
விளக்கவுரை என்பதை
விளங்கிக்கொள்ளுங்கள்.

அமைதியாய் சொன்னாள் சுடர்விழி.


சட்டென்று வந்த சரளமான பதிலில்
சற்றே திகைத்து,
தொடர்ந்தான்


கொஞ்சம்
சிந்தித்துப் பார் சுடர்விழி.


விளக்கைக் கொளுத்த
வினாடிநேரம் போதும்
அது போல் தான் காதலும்.


நட்பு என்பது
காதலின் முகவுரையில்லை
என்று முரண்டுபிடிக்காதே.


நான்
துளியாய் தான் இருந்தேன்
உன்னில் சரிந்தபின்பு தான்
அருவியானேன்.

இப்போது அது விஸ்வரூபம் கொள்கிறது.


நான் விரிந்துவிட்டேன்
இனி
மொட்டுக்குள்
மீண்டும் போக நிர்ப்பந்திக்காதே.

மழையை மேகத்துள்
திணிக்க முயலாதே.


இதயத்துடிப்பு தான்
நீயென்று நினைத்திருந்தேன்
இல்லை
இதயமே நீ தான் என்று
விளங்கிக் கொண்டேன்


என் மூச்சுக்காற்று நீ என்றால்
நான்
வேறுகாற்றை  வேண்டியிருப்பேன்

ஆனால் நுரையீரலே நீதான் என்று
என் உடலின்
ஒவ்வொரு அணுக்களும்
ஒத்துக்கொள்கின்றன.


சொல்லிவிட்டேன் என் பிரியமே
பிரிவதற்குப் பிரியப்படாதே.


எப்படி முடிந்தது என்று
அவனால் சொல்லமுடியவில்லை
ஆனால்
சொல்லிவிட்டான்.


சொல்லாத காதல்,
முளைக்காத விதைபோன்றது
சொல்லிவிட்டான்
பயிர் விளையவேண்டுமே எனும் வேண்டுதலோடு,
களை விளைந்துவிடுமோ எனும்
கவலையும் அவனுக்கு !!!


அவள் பதில்...


வேண்டாம் இனியன்
நீங்க நல்லவங்க
ஒத்துக்கிறேன்
காதல் எல்லாம் வேண்டாம்


ஏன் என்னைப் பிடிக்கலியா ?

மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து
முனகலாய் கேட்டான்


பிடிச்சிருக்கு
ஆனா காதலில்லை !!!


ஏன் ?
காதலிக்கப் பிடிக்கலையா
இல்லை காதலே பிடிக்கலையா ??
நிதானமாய் கேட்டான்

ஆழமாய் யோசித்து...
அழுத்தமாய் சொன்னாள்.

இல்லை !!!

காதல் எனக்கு பிடிக்கும்.
நண்பனை போய்.... என்று இழுத்தாள் ..!

ஊரிலுள்ள எல்லா
காதலரும் சேர்ந்தால் 
மகிழ்கிராய் ...
நானும் நீயும் சேர்வதை
மட்டும் ஏன் நட்பு என்று மறுக்கிறாய் 

நான் சொல்ல்வது 
உனக்கு புரியவில்லையா 
நான் எவ்வாறு புரிய வைப்பது ..


தொட்டாச் சிணுங்கி
இதழ் சுருக்குவதுபோல
அவன் முகம் மூடிக்கொண்டது.


நீ.
வாக்கியங்கள்
வார்த்தைகளாகி
எழுத்தில் வந்து முற்றுப் பெற்றது.

ஆமாம்.

ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு
மௌனமானாள்  சுடர் விழி.

வேறு வார்த்தைகள் 
அவன் நாவிலிருந்து 
வெளிவர மறுக்க 
மௌனதுடனேயே 
மௌனமாகியது தொலைபேசி ........

காதல் (கவிதை ) தொடரும்........

காதல் (கவிதை ) தொடரும்........


 


தொடர்கிறது.........


வானவில் ஒன்று
விரல்களில் விழுந்துவிட்டு
விலகிச்செல்கிறதா ?


அணைதிறந்ததும்
தண்ணீர்த்துளிகள்
அமிலமாகிவிட்டதா ?


சுவாசிக்கும் காற்றுக்குள்
மூச்சடைக்கும் மருந்து
முழுகிவிட்டதா ?


ரோஜா நிமிர்ந்தபோது
நந்தவனத்துக்கு சிரச்சேதமா ?

புரியவில்லை அவனுக்கு.

முட்டை ஒட்டுக்குள் இருக்கிறது
அவன் மனசு.
கொஞ்சம் அசைந்தாலும்
உடைந்துவிடுவதாய் உணர்ந்தான்.


மாலை நேரம் மெதுவாய் நகர
இதயத்துடிப்பு மட்டும்
இரண்டரை மடங்கு அதிகமாகி விட்டது.


சூரியன் விழுவதற்கும் எழுவதற்கும் இடையே
இவ்வளவு இடைவெளியா ?
இதென்ன
இன்றைய இரவு மட்டும் ஆமை ஓட்டுக்குள்
அடங்கிவிட்டதா ?


கடிகாரம் வினாடிகளைக் கடக்க
நிமிட நேரம் எடுத்துக்கொள்கிறதா ?
புரியவில்லை அவனுக்கு.


தூக்கம் என்பது விழிகள் சம்பந்தப்பட்டதில்லை
என்பதை
முதன் முதலாய் உணர்கிறான்.
விழித்தே இருப்பதின் வேதனை அறிகிறான்


காதல் என்ன கல்லூரி ஆசிரியரா ?
புதிதாய் புதிதாய் விளக்கம் தருகிறதே

அவன் மன ஓட்டம்
நயாகராவை விட
வேகமாக ஓடியது.


பிரமிடுகளில்
புதைக்கப் பட்டதுபோல பிரமை.

தூங்கவே இல்லை என்பதை
விடியல் சொன்னபோது தான்
விளங்கிக் கொண்டான்.


தூக்கமில்லாத இரவு.
அது ஒரு துயரம்.

களைப்பு

கண்களையும் கால்களையும் வம்புக்கு இழுக்க
கவனமாய் நடந்தான்.



சிரித்தபடி கேட்டார்கள் நண்பர்கள் 

அதெல்லாம் இல்லை.
கடிகாரம் ஓடுவதை
கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன்.  


அவளது தொலைபேசி அழைப்பு
வரவே
அவனது முகம் கேள்விக்குறி 
ஆகியது
அவளே பேச தொடங்கினாள் 
நேற்று நடந்ததை மறந்துவிடு இனியவன் 
நீங்கள் காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது 
எனக்கு தெரிந்திருக்கவில்லை

நான் அதற்கு காரணம் 
என்றால் என்னை மன்னித்து விடுஎன்றாள்
எப்போதும் சந்தோசமாக இரு !
என்னை நினைத்து 
வருந்தாதே !
என்ற ஆறுதல் வார்த்தை களுடன் 

ம்ம் 
என்று கொண்டே 
அவளின் அக்கறையை ரசித்தான்

அன்று முதல்
அவனுக்கென்று எதுவும் தனியாய் இல்லை.
அவளுடன் பாதி நாள் கரையும்,
அவள் நினைவிலே மீதிநாள் கரையும்.


இன்னொரு நாள் இனியன் பேசினான் மறுபடியும்.
காதலை !
இன்னும் காதலிப்பதாய்.

அவள் மௌனமானாள்

கடந்த காலத்தில் நான் இழந்தது ஏராளம் இனியன்.
சுதந்திரம்,
நிம்மதி,
பெற்றோரிடம் எனக்கிருந்த நம்பிக்கை !

இனி
அவர்கள் விழிகளில் என் விரல்கள்
கவலைச் சாயம் பூசாது.


அவர்கள் சொன்னால்
முதுமக்கள் தாழிக்குள்
முடங்கிவிடவும் எனக்கு சம்மதமே.


உங்களை எனக்கு ரொம்ம பிடிக்கும்.
ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ஆனால்
அம்மா அப்பாவுக்கும் உங்களைப் பிடிக்குமென்று
நம்பிக்கையுண்டு 


அனால் அவர்களிடம் 
நான் சிபாரிசு செய்வேன் .. செய் 
என்று மட்டும்
கேட்காதீர்கள் 

நட்பை மறந்து காதல் செய்வேன் 
என்றும் எதிர் பார்க்காதீர்கள்
பதில்......

இனியவனுக்கு இன்று இது வரை
இவள் மனம் வந்ததே
போதும் என்றிருந்தது 

நண்பர்கள் வட்டாரதுடன்
பல பல கலந்துரையாடல்கள் 

அவளை நட்பிலிருந்து மாற்றி 
இது காதல் என்பதை எவ்வாறு 
புரிய வைப்பது என்று ....

பிடித்தபடி வாழ்ந்த வாழ்க்கை
பிறருக்குப் பிடிக்கவில்லை

பிடிக்கவேண்டுமென்பதற்காகவே
சிலநாள் எனக்குப்
பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தாகி விட்டது !

சுடரை சந்திக்க ஆவலாய் 
காத்திருந்தான் 

சுடரை இன்னும் காணவில்லை
கவிதைகள் சொல்வது நிஜம் தான்.

காத்திருக்கும் நிமிடங்கள்
நொண்டியடிக்கும்
கேள்விக் குறியோடு காத்திருந்தாலோ
அது நத்தையோட்டுக்குள் தவழுதல் பழகும்


அதோ வருகிறாள் சுடர்
எழுந்துவிட்டான்
இனம் புரியாத ஒரு பதட்டம்..


இதென்ன
நாக்கு கரைந்து கொண்டிருக்கிறதா
உள்ளுக்குள் உமிழ்நீர் ஊற்றெடுக்கிறதே !


நாக்கு நகரமறுத்து
நங்கூரமாக வடிவெடுத்ததாய்
ஒரு பிரமை !


அவள் முகத்தைப் பார்த்தான்.
முகம் மனசின் கண்ணாடி தான்
பெண்களின்
முகம் கூட ஆழமானது !
எதுவும் விளங்கிக் கொள்ள முடியவில்லை !!



சுடர்
அம்மா அப்பா எப்படி இருக்காங்க ?
ஒரு வார்த்தை கேட்டான்.


அம்மா அப்பா நலமா இருக்கிறாங்க.

அவனுடைய உணர்வுகளோடு விளையாடுவதற்காகவே
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

குளியலறைத்தொட்டியில்
தூண்டில் போடுவதுபோல்,
நேரம் வீணாகிக் கொண்டிருப்பதாய்
தோன்றியது அவனுக்கு !
  
நட்பாய் தொடர்வதில் எனக்கு இன்னும் நிறைய
நம்பிக்கை இருக்கிறது !!

 ஐயோ
இமயமலை ஏறும்போது
கால்களில் ஆணி அறையாதே.


நட்பின் எல்லைகளை நான் தாண்டிவிட்டேன்.
கடலிலிருந்து நதியை
வடித்தெடுக்க முடியாது.

 தொடரும்....

No comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes